Sunday, February 7, 2016

maoist Sry Lanka - original text


ஷோபாசக்தியின் அவியாத பொங்கலும் தமிழ் தேசியர்களின் வாய்ப் ப‌ந்த‌லும்

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும், பிரபல எழுத்தாளர், திரைப்பட நடிகர் ஷோபாசக்தி என்ற அந்தோனிதாசன், மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்த தடவை தைப் பொங்கல் பற்றிய அவரது கட்டுரை குட்டையை குழப்பி விட்டுள்ளது. அதற்குப் பதில் அளிப்பதற்காக "வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்" (http://www.shobasakthi.com/shobasakthi/?p=1246) என்ற தலைப்பின் கீழ் இன்னொரு கட்டுரை எழுதி இருக்கிறார். ஷோபா சக்தி சொல்ல வருவது இதைத் தான். தைப் பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே உரிய விசேட பண்டிகை அல்ல. அது இந்திய இந்துக்களின் பண்டிகை. அதற்கு அவர் கூறும் விளக்கம்:
 //இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?//
பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்று வாதிடுபவர்கள் செய்யும் அதே தவறைத் தான் ஷோபாசக்தியும் செய்கிறார். அது இந்துக்களின் பண்டிகை என்று நிறுவுவதற்கு விக்கிபீடியா முழுவதும் தேடி ஆதாரங்களை கொண்டு வந்து அடுக்குகிறார். பொங்கல் உண்மையில் தமிழர்களுக்கு மட்டுமே உரிய பண்டிகையல்ல. ஆனால், அதை இந்துக்களுடையது என்று கூறுவதும் தவறாகும். 
பொங்கல் ஓர் உழவர் திருநாள் என்றால், மனித சமுதாயம் முதன் முதலாக விவசாயத்தை கண்டுபிடித்த காலத்தில் இருந்து இருந்திருக்க வேண்டும். பொங்கல் நாளன்று சூரியனுக்கு படைக்கிறார்கள் என்றால், உலகில் சூரிய வணக்கம் தோன்றிய காலத்தில் இருந்து இருந்திருக்க வேண்டும்.
பொங்கல் தமிழர்களது பண்டிகை என்று சொல்பவர்களுக்கு சில அரசியல் குறிக்கோள்கள் உள்ளன. //பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள்.// இவ்வாறு ஷோபாசக்தி எழுதுகின்றார். 
அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால், அது தமிழர்களின் விழா என்று நிறுவுவதற்குப் போதாது. அந்தப் போதாமையை ஷோபாசக்தி தனது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
//பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.//
முதலில் தமிழர்கள் என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு மொழியின் பெயர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் தான், தமிழ் அல்லது அதன் கிளை மொழிகளைப் பேசும் அனைவரும் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்டனர். சங்க காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தமிழர் என்ற உணர்வு இருக்கவில்லை. 
அரச கரும மொழியாக இருந்த தமிழை புலவர்கள் வளர்த்தனர். தமிழில் இலக்கியம் படைத்த புலவர்கள் வீட்டில் வேறு மொழி பேசி இருக்கலாம். பொங்கல் விழா பற்றி தமிழில் எழுதி விட்டார்கள் என்பதற்காக அதை தமிழர்களின் தேசிய விழா என்று நிறுவ முடியாது. அதற்காக அதனை இந்துக்களின் மதத் திருவிழா என்றும் கருத முடியாது. 
தமிழர் என்ற இன அடையாளம் கற்பிதம் தான். அதே போன்று, இந்து என்ற மத அடையாளமும் பிற்காலத்தில் உருவானது தான். இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய - மொகலாயர்கள் உள்நாட்டு பூர்வீக மதங்களை "ஹிந்துஸ்தான் மதம்" என்ற பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் இந்து மதம் என்றாகி விட்டது.  
கொரியர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள். "மிலேச்சத் தனமான சர்வாதிகாரி ஆளும்", "மதச் சுதந்திரம் அடக்கப்படும்", வட கொரியாவில் அனுமதிக்கப் பட்ட ஒரேயொரு பண்டிகையும் பொங்கல் மட்டும் தான். கொரிய மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள் அல்லது பௌத்தர்கள். சீனாவில் உள்ள கன்பூசிய மதம் மாதிரி, கொரிய மரபில் தோன்றிய ஷோண்டோ மதம் உள்ளது. ஆனால், அங்கே இந்துக்கள் யாரும் கிடையாது. மேற்படி மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. கொரியர்கள் தமிழர்கள் என்றும் யாரும் சொல்வதில்லை.
ஒரு காலத்தில், உலகம் முழுவதும் விவசாயப் பொருளாதாரத்தை மட்டும் நம்பியிருந்த மக்கள், அறுவடைக் காலத்தை பெரும் விழாவாக கொண்டாடி வந்தனர். சூரியனை கடவுளாக வழிபடும் வழக்கம், மதங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே பின்பற்றப் பட்டு வருகின்றது. வர்ணாச்சிரம கால பிராமண மதத்தில் சூரிய பகவான் வழிபடப் பட்டு வந்தாலும், பிற்கால இந்து மதத்தில் அது கைவிடப் பட்டது. 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள், ஆரிய மயப் பட்டிருந்தனர். அவர்கள் இந்திரவிழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடி இருந்தால் அதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதற்காக, பொங்கல் இந்துக்களின் பண்டிகை என்பது அபத்தமான கூற்று.
//இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.... இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள் -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது.// - ஷோபாசக்தி 
இங்கே அவர் குறிப்பிடும் "தமிழ்" பஞ்சாங்கக் கலண்டர், உண்மையில் சம்ஸ்கிருத பஞ்சாங்கத்தை பின்பற்றியது தான். வான சாஸ்திரம் இந்து மதத்திற்கு உரிய தனிச் சொத்து அல்ல. பன்னிரெண்டு ராசிகளையும் இந்து மத சாஸ்திரங்கள் பிரிக்கவில்லை. சுமேரியர் காலத்தில் இருந்தே பன்னிரெண்டு ராசிகளைக் கொண்ட வான சாஸ்திரம் பின்பற்றப் பட்டு வருகின்றது. அதற்கு இந்து மதம் ஏக போக உரிமை கொண்டாட முடியாது.
இந்த இடத்தில், ஏன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்ற விளக்கத்தையும் குறிப்பிட வேண்டும். இந்து மதம் என்ற ஒன்று எந்தக் காலத்திலும் உலகில் இருக்கவில்லை. அதற்கு மாறாக, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டும் மதம் என்று சொல்லக் கூடிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. மதம் என்பது அதற்கேயுரிய தனித்துவமான கொள்கைகள், தத்துவங்கள், நெறிகளைக் கொண்டுள்ளது. அவற்றை முடிந்த முடிவாக வரையறுத்துக் கொள்கின்றது. நம்பிக்கையாளர்களை நிறுவனப் படுத்தி வைத்திருக்கின்றது.
கிறிஸ்தவமும், இஸ்லாமும் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளில் பன்னிரெண்டு ராசிகளைக் கொண்டு பஞ்சாங்கம் கணிக்கும் வழக்கம் இருந்தது. அரேபியாவில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் கோயில்கள் இருந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய, பெரியாரிய அல்லது மார்க்சிய கொள்கைகளை ஏற்றுக்கொண்ட, இந்துத் தமிழர்கள் பலருக்கு அவை மூட நம்பிக்கைகளாக தெரிகின்றன. (எனது நண்பர் ஷோபாசக்தியும் அவர்களில் ஒருவர் தான்.) அதே மாதிரித் தான், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களும் அவற்றை மூட நம்பிக்கைகளாக கணித்திருந்தன. கிறிஸ்தவம் கோலோச்சிய ஐரோப்பாவிலும், இஸ்லாம் கோலோச்சிய மத்திய கிழக்கிலும், ராசி பலன் பார்க்கும் வழக்கம் தடை செய்யப் பட்டிருந்தது.
மத்திய கிழக்கில், கிறிஸ்தவத்திற்கு, அல்லது இஸ்லாத்திற்கு முந்திய, பொங்கல் போன்ற பண்டிகைகளும் தடை செய்யப் பட்டன. அதனால் தான் முஸ்லிம்கள் மசூதிகளில் பொங்கிப் படைப்பதில்லை. அது, இஸ்லாமிய நாகரிகத்திற்கு முந்திய, மூட நம்பிக்கையை ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். கிறிஸ்தவர்களும் அதே காரணத்திற்காகத் தான் பொங்கல் கொண்டாடுவதில்லை.

அப்படியானால், எதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கினார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி தான். மேற்கு ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளினால் தான் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் பரப்பப் பட்டது. அவர்கள், எப்படியோ தமது மதத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தில், "புதிய கத்தோலிக்கர்கள்" தமது பாரம்பரிய மதப் பழக்க வழக்கங்களையும் பின்பற்ற அனுமதி அளித்தனர். மெக்சிகோ போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில், இன்றைக்கும் பூர்வீக மாயா, அஸ்தேக் மதச் சம்பிரதாயங்கள், கத்தோலிக்க மதத்தின் பெயரில் பின்பற்றப் படுகின்றன.
பொங்கல் பற்றிய கட்டுரையில் இருந்த தவறுகளை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஷோபாசக்தி எழுதுவதெல்லாம் சரியானதல்ல. இருந்தாலும், ஷோபாசக்தி எழுதி விட்டார் என்பதற்காகவே எதிர்ப்பதும் சரியல்ல. "ஷோபாசக்தி கிறிஸ்தவராகப் பிறந்து விட்ட படியால் இந்துத்துவம் பற்றிப் பேசக் கூடாது..." என்று சில இந்து- முல்லாக்கள் பத்வா பிறப்பிக்கின்றனர். "உயர்சாதியில் பிறந்து விட்ட காரணத்தால் ஷோபாசக்தி தலித்தியம் பேசக் கூடாது" என்பதும் அபத்தமானது. ஒருவர் சொல்லும் கருத்தை விமர்சிக்க வேண்டுமே தவிர, தனி மனிதரை அல்ல. இவையெல்லாம் விதண்டாவாதங்கள். 
இந்திய சமுதாயத்தை ஆரியம் எதிர் திராவிடம் என்று, கருப்பு - வெள்ளையாக பார்க்கும் கோட்பாட்டில் இருந்து இந்தத் தவறுகள் எழுகின்றன. 21 ம் நூற்றாண்டுத் தமிழ் தேசியவாதிகள், தம்மை திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் திராவிடக் கட்சியினர் தான், "தமிழனுக்கு தனி நாடு கோரும்" தமிழ் தேசியக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினார்கள் என்பதைப் பலர் அறியாமல் உள்ளனர். தனித் தமிழ்நாடு கோரிய அண்ணாத்துரையை இந்த இடத்தில் நினைவுகூரலாம். பொங்கல் தமிழர்களின் தனித்துவமான பண்டிகை என்ற அலப்பறை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்டுபிடிப்புகள் தான்.
மறுபக்கத்தில், ஷோபாசக்தி பெரியாரின் திராவிடர் கழக காலத்திலேயே நின்று விடுகிறார். ஆரியமும், இந்துத்துவமும் மட்டுமே நிலையானவை, எதிர்க்கப் பட வேண்டியவை என்று கருதுகின்றார். தலித்தியம் குறித்த முற்சாய்வுகளும் அதில் இருந்தே எழுகின்றன. சாதிய கட்டமைப்பு இந்து மதத்திற்கு மட்டுமே உரியது என்று கருதிக் கொள்கிறார். "சிங்கள பௌத்தர்கள், பாகிஸ்தானிய முஸ்லிம்கள் மத்தியில் கூட இறுக்கமான சாதியக் கட்டமைப்பு உள்ளது." நான் இந்தத் தகவலை, ஒரு தடவை ஷோபாசக்தியிடம் நேரடியாகவே தெரிவித்திருந்தேன்.
ஷோபாசக்தி தனது பொங்கல் பற்றிய கட்டுரையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை பின்வருமாறு கடந்து செல்கிறார்:
//இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.//
சமூக வலைத்தளங்களில் ஷோபாசக்தி மீதான விமர்சனங்களை காணும் போதெல்லாம் ஓர் உண்மை தெளிவாகும். ஷோபாசக்தி என்ன எழுதினாலும், என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். ஷோபாசக்தி முன்னர் புலி உறுப்பினராக இருந்த காலத்தில் குழந்தைப் போராளியாக இருந்தேன் என்று சொன்னால் அதைக் கிண்டல் அடிப்பார்கள். அவர் தானொரு கிழட்டுப் போராளியாக இருந்தேன் என்று சொன்னாலும் அதே நையாண்டிகள் தொடரும். 
தசாப்த காலமாகவே, ஷோபாசக்தி புலிகளின் மனித உரிமை மீறல்களை பற்றி எழுதி வந்த படியால், எப்போதும் யாராவதொரு புலி ஆதரவாளர் அவரை தூற்றிக் கொண்டிருப்பார். இவ்விரண்டு தரப்பினரும் ஒருவரில் ஒருவர் தங்கி இருப்பது தான் வேடிக்கை. புலிகள் என்ன செய்தாலும் எதிர்ப்பவர்கள் புலி எதிர்ப்பாளர்கள் ஆகிறார்கள். அது தவறானது மட்டுமல்ல, ஒரு தலைப் பட்சமானது. அதே மாதிரித் தான் ஷோபாசக்தி எதிர்ப்பாளர்களும். அவர் என்ன செய்தாலும் எதிர்ப்பார்கள். சினிமாப் படம் நடித்தாலும் எதிர்ப்பார்கள்.
ஷோபாசக்தி, தான் "புலிகளை கண்டிப்பதைப் போன்று பத்து மடங்கு அதிகமாக இலங்கை அரசை கண்டித்தேன்" என்று சொல்வார். ஆனால், அவர் எழுதும் பொழுது மனித உரிமைகள் நிறுவனங்களின் ஆதாரங்களை காட்டிப் பேசுவார். அதை வைத்து, இலங்கை அரசின் குற்றங்களையும், புலிகளின் குற்றங்களையும் பட்டியலிடுவார். பேரினவாத அரச ஒடுக்குமுறையையும், விடுதலை இயக்கமொன்றின் எதேச்சாதிகாரத்தையும் ஒரே தன்மை கொண்டவை என்று சமப் படுத்த முடியாது. 
புலிகளைப் பற்றி குறை கூறுவது, புலி விசுவாசிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அர்த்தமல்ல. அப்படி நான் சொல்ல வரவில்லை. ஆனால், மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களில், அரசு மட்டுமல்லாது, போராளிக் குழுக்களாலும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளதாக பட்டியலிடுவது ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசியல் ஆகும்.
போரில் சிங்களவன் செத்தாலும், தமிழன் செத்தாலும் வெள்ளையனுக்கு ஒன்று தான். இனங்களை ஒன்றுடன் ஒன்று மோத விட்டு விட்டு, ஆயுதங்களை விற்று இலாபம் சம்பாதிப்பார்கள். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதிபதிகள் போன்று நடந்து கொள்வார்கள். இறுதியில் நாட்டு மக்கள் அனைவரதும் தலைகளில் கடன் சுமைகளை ஏற்றி விடுவார்கள். 
புலிகளின் ஈழப் போராட்டம், எந்தளவு குறைபாடுகளை கொண்டிருந்தாலும், இலங்கையில் நியோ-லிபரலிச மேலாண்மையை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அந்த வகையில், புலிகள் தலைமை தாங்கிய தமிழ் தேசிய இனத்தின் போராட்டம், அமெரிக்கா தலைமையிலான மூலதன ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது தான். ஒரு ட்ராஸ்கிஸ்ட் - மார்க்சிஸ்டான ஷோபாசக்தி இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போன காரணம் என்ன?
அதற்கான காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் இலகு. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது அரசியல் வாழ்வை தொடங்கிய ஷோபாசக்தி, அதிலிருந்து முரண்பட்டு விலகிச் சென்றார். அதற்குப் பிறகு அந்த முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவதே அவரது அரசியல் அடையாளம் ஆகியது. இது ஷோபாசக்திக்கு மட்டுமே உரிய குணவியல்பு அல்ல. புலிகள் இயக்கத்தில் இருந்து முரண்பட்டு வெளியேறியவர் புலி எதிர்ப்பாளராகத் தான் இயங்க முடியும். 
சில புலி உறுப்பினர்கள், இயக்கப் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இத்தாலிக்கு புலம்பெயர்ந்து சென்ற, முன்னாள் புலிப் பொறுப்பாளர் மேத்தாவை குறிப்பிடலாம். அவர் பிற்காலத்தில் பிரான்ஸ் வந்திருந்து புலிகளுக்கு பணம் சேர்த்து அனுப்பி வந்தார். பணம் கையாடல் காரணமாக கொன்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக, புலம்பெயர்ந்து வந்த பின்னரும் தம்மை புலி விசுவாசிகள் போன்று காட்டிக் கொண்டவர்கள் பலருண்டு.
ஷோபாசக்திக்கு அப்படி ஒரு இக்கட்டான நிலைமை இருக்கவில்லை. ஆனால், புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்களையும் நம்பாத காலகட்டம் ஒன்றிருந்தது. அவ்வாறு விலகிச் சென்றவர்கள் டெலோ, தமிழீழக் கட்சி போன்ற இயக்கங்களில் ஊடுருவி உடைத்த வரலாறும் உள்ளது. அப்படியான நிலைமையில், ஷோபாசக்தி போன்றவர்கள் மிகத் தீவிரமாக புலி எதிர்ப்புவாதம் பேசுவதன் மூலம் தான், தம் மீதான சந்தேகத்தை போக்க முடிந்திருக்கும்.
இது புலிகளில் இருந்து விலகிச் சென்றவர்களுக்கே உரிய சிறப்பம்சம் அல்ல. புளட்டில் இருந்து விலகிச் சென்றவர்கள் தீவிர புளொட் எதிர்பாளர்களாக உள்ளனர். ஜேவிபி இல் இருந்து விலகிச் சென்றவர்கள் தீவிரமான ஜேவிபி எதிர்பாளர்களாக காணப் படுகின்றனர். 
இது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் அடைக்கலம் கோரிய ஸ்டாலினின் மகள், ஸ்டாலினிச எதிர்ப்பாளராக அரசியல் நடத்தினார். அமெரிக்காவுக்கு தப்பியோடிய பிடல் காஸ்ட்ரோவின் மகள், அங்கே மியாமியில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை திருமணம் செய்து கொண்டார். 
ஸ்டாலினின் மகளும், காஸ்ட்ரோவின் மகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக தம்மை அடையாளப் படுத்தலாம் என்றால், ஷோபாசக்தி தன்னை ஒரு புலி எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டதில் என்ன அதிசயம் இருக்கிறது?



தைப் பொங்கல் பற்றிய முன்னைய பதிவு:
தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்

Thursday, January 14, 2016

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?


De Telegraaf, 13-01-2016
சிரியாவில், "இஸ்லாமிய தேசம்" என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.
அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:
- ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.
- ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது. அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.
- ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர். உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.
- ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.
- ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
- கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.
- குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.
- பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.
- பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.
- பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
- பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.
- தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன. ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.
- குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.
- ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.
- மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment