Sunday, May 18, 2014
நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்
ஒரு இனப்படுகொலையாளி பிரதமராகிறார்! நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். |
இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளிக் குதிக்கின்றனர். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வென்ற பொழுது கூட, இலங்கையில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மோடி ஆதரவாளர்களில், கணிசமான அளவு தமிழர்களும் அடங்குவார்கள். அவர்கள் யாரும் ஈழப் போரின் துயர முடிவில் இருந்து, எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகின்றது. |
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஐந்தாண்டு நினைவு தினமும், நரேந்திர மோடி
இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தினமும் அடுத்தடுத்து வந்தது, ஒரு
தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வரப்போகும் பேரழிவை
அது கட்டியம் கூறுகின்றது.
மகிந்த
ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது, அவர் தமிழ்த்
தீவிரவாதத்தை, அல்லது புலிகளை அழித்தொழிப்பார் என்ற என்ற எதிர்பார்ப்பில்
பலர் அவருக்கு ஓட்டுப் போட்டிருந்தனர். அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால்
படுகொலைகள்.
நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களின் மனநிலையும், அதற்கு
சற்றேனும் குறைந்தது அல்ல. இஸ்லாமிய தீவிரவாதத்தை, காஷ்மீர் இயக்கங்களை,
நக்சலைட்டுகளை அழித்தொழிப்பார் என்று எதிர்பார்த்து, மோடிக்கு ஓட்டுப்
போட்டதாக பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச முதல்தடைவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரம், "அவர்
ஒரு மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, இதற்கு முன்னர் இருந்த எல்லா
சிங்களத் தலைவர்களையும் விட கடும்போக்காளர், அவர் ஜனாதிபதியாக தெரிவானால்,
தமிழர்களுக்கு அழிவுகாலம் நிச்சயம்...." என்றெல்லாம் கூறி, புலிகள்
பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அன்று, புலிகளின் ராஜபக்ச
எதிர்ப்புப் பிரச்சாரங்களை யாரும் பொருட் படுத்தவில்லை. நல்லாட்சி தருவார்
என்ற எதிர்பார்ப்பில், பெரும்பாலான மக்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக
தேர்ந்தெடுத்தார்கள்.
2005 ம் ஆண்டு, புலிகள் விடுத்த ராஜபக்ச அபாயம் பற்றிய எச்சரிக்கைகள்
யாவும், 2009 ம் ஆண்டு உண்மையென மெய்ப்பிக்கப் பட்டது. இலங்கையில்
நல்லாட்சி தருவார் என நம்பப் பட்ட கடும்போக்காளர், புலிகளையும், அவர்களோடு
ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் படுகொலை செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஒரு
பெரும் மனிதப் பேரவலம் நடந்த அந்த நாட்களை, உலகெங்கும் வாழும் புலி
ஆதரவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், மே 18 இனப்படுகொலை தினமாக
நினைவுகூர்கின்றனர்.
இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவானால்
ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்து, ஏற்கனவே பலர் எச்சரித்திருந்தனர்.
ஆனாலும், பெரும்பான்மை இந்திய மக்கள், அவரையே பிரதமராக
தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளையும்,
நக்சலைட்டுகளையும் மட்டுமல்ல, தன்னை எதிர்த்தவர்களையும் கூட, நரேந்திர மோடி
ராஜபக்சவின் பாதையை பின்பற்றி அழித்தொழிக்கலாம்.
இந்தியாவிலும், ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்க விட மாட்டோம் என்று, மே
18 நினைவுநாளில் உறுதி பூணுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து,
ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், ராஜபக்ச எதிர்ப்பு போராட்டம், அயல்நாடான
இந்தியாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், உயிர்ப்புடன் இருந்து வருவது
குறிப்பிடத் தக்கது. அதே மாதிரி, மோடி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்து
முன்னெடுக்கப் படும்.
No comments:
Post a Comment